எங்களைப் பற்றி
அகாடமியைப் பற்றி
கம்மகுலம் கடந்து வந்த பாதையும், இன்று நாம் முன்னெடுக்கும் பணிகளும்.
நமது வரலாறு
கம்மகுலம் கடந்து வந்த பாதை
நமது முன்னோர்கள் மலர் பாதைகளில் நடந்து வந்து மாளிகையில் வாழ்ந்தவர்கள் அல்ல; நெருப்பாற்றில் நீந்தி வந்து நமக்கான வளமான வாழ்வை வடிவமைத்தவர்கள்.
காலங்கள் கடந்து, மன்னர்களின் ஆட்சி முடிந்து, அடுத்தடுத்த காலங்களில் சுதந்திரப் போராட்ட காலங்களில் பல தியாகங்கள் புரிந்த தியாகிகளாகவும் திகழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள்.
நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் எனப் பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக கம்மவார் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பக்தியில் சிறந்த பண்பாளர்களாகவும், தயாள குணம் கொண்ட வள்ளல்களாகவும், கடும் உழைப்பாளர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நமது கடந்த கால காலடிச் சுவடுகள்
மதுரை மீட்கப்பட்ட வரலாறு
நமது முன்னோர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்த பதினான்காம் நூற்றாண்டின் நிகழ்வுகள்.
-
1311
திருக்கோவில்கள் கொள்ளை
அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர், 1311 ஆம் ஆண்டு மார்ச்–ஏப்ரல் மாதங்களில் சிதம்பரம் நடராஜர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில், அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற மிக முக்கியமான ஆன்மீகப் பண்பாட்டு நகரங்களைக் கொள்ளையடித்து, பல டன் கணக்கிலான மதிப்புமிக்க தங்க, வைர, வைடூரிய ஆபரணங்களையும், ஆயிரக்கணக்கிலான குதிரைகளையும் யானைகளையும் கொள்ளையடித்துச் சென்றான்.
-
1323
மீண்டும் ஒரு படையெடுப்பு
இவ்வாறு செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு மாலிக் காபூர் புறப்பட்டதும், 1323 ஆம் ஆண்டு துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த முகமது பின் துக்ளக் மீண்டும் படையெடுத்து வந்தான்.
-
1378
மதுரை விடுதலை
விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பண்ணர் கி.பி. 1378 ஆம் ஆண்டு மதுரையின் மேல் படையெடுத்து வந்து, சுல்தானியர்களை அடித்து விரட்டி, கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
-
மதுரா விஜயம்
இளவரசி கங்காதேவியின் பதிவு
விஜயநகர இளவரசரின் மனைவி கங்காதேவி பல மொழிகளை எழுத, படிக்க, பேசத் தெரிந்த பன்மொழிப் பண்டிதர் ஆவார். இளவரசி கங்காதேவி இந்த சரித்திர சம்பவத்தை "மதுரா விஜயம்" என்ற பெயரில் சமஸ்கிருத மொழியில் எழுதினார். இந்த நூல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
கம்மவார் நாயுடு
நாம் யார்
விஜயநகர இளவரசர் குமார கம்பண்ணரோடு மதுரையைக் காப்பாற்ற வந்த தளபதிகள் உட்பட அனைத்து நிர்வாகிகளும்தான் இன்று "கம்மவார் நாயுடு" என்ற பெயரில் அடையாளம் காணப்படுகிறோம். இது தவிர, தெலுங்கு பேசும் அனைத்து இதர சமூகத்தினரும் இளவரசர் குமார கம்பண்ணரோடு புலம் பெயர்ந்து வந்து சுல்தானியர்களுக்கு எதிராகப் போர் புரிந்தவர்கள்தான்.
-
புனர்நிர்மாணம்
மீண்டும் எழுந்த ஆலயங்கள்
சுல்தானியர்களால் தரைமட்டமாக்கப்பட்ட அனைத்துக் கோவில்களும் மீண்டும் பிரம்மாண்டமாகப் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. கோவிலை நிர்வகிப்பதற்கும் தெய்வ வழிபாட்டிற்காகவும் பல நூறு ஏக்கர் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன. ஆலயங்கள் வழிபாட்டிற்குரிய இடமாக மட்டுமில்லாமல் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவும், போர் மற்றும் அபாய காலங்களில் மக்களுக்குப் புகலிடமாகவும் திகழ்ந்தன. தமிழகத்தின் தலைசிறந்த கோவில்களின் பிரதான திருவிழாக்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டன; அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மதுரை சித்திரைத் திருவிழாவாகும்.
அன்றைய காலகட்டத்தில் ஆந்திராவிலிருந்து குமார கம்பண்ணர் தமிழகத்தைக் காப்பாற்றத் தவறியிருந்தால், மதுரையைத் தொடர்ந்து இருக்கின்ற அனைத்துக் கோவில்களும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும். சுல்தானியக் கொள்ளையர்களை மதுரையில் அடித்து வடக்கு முகமாக விரட்டாமல் இருந்திருந்தால், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உட்படப் பல கோவில்கள் பாதிக்கப்பட்டிருக்கும்; அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவிலும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்.
மாபெரும் ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காத்த வீரர்கள் தெலுங்கர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நம்மை வழிநடத்துபவை
நமது நம்பிக்கையும் லட்சியமும்
நமது நம்பிக்கை
நமது சமூகம் உயர்வு பெற ஒரே வழி ஆன்மீகமும் அது சார்ந்த வாழ்க்கை முறையும்தான் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம்.
“சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்! சிறுவர் அனைவரும் இராமரே!”
இந்த மேம்பட்ட லட்சியத்தை நோக்கி திறம்படச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது கம்மவார் கல்சுரல் அகாடமி.
நமது பணிகள்
கம்மவார் கல்சுரல் அகாடமியின் நோக்கங்கள்
கோவில் தோறும், குடும்பம் தோறும் நாம் முன்னெடுக்கும் பணிகள்.
-
குலதெய்வக் கோவில்கள்
தமிழகத்தில் உள்ள குலதெய்வக் கோவில்களுக்குச் சென்று, அந்தக் கோவிலின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, கோவில் நிர்வாகிகளில் ஒருவரை கம்மவார் கல்சுரல் அகாடமி சேரிடபிள் டிரஸ்ட் உறுப்பினராக இணைத்துக் கொள்கிறோம்.
-
குடும்பத் தரவுகள்
அவர் சார்ந்த குலதெய்வக் கோவிலில் உள்ள குடும்பங்களின் விவரம், ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் குழந்தைகள் எத்தனை பேர், பெண் குழந்தைகள் எத்தனை பேர், அவர்களில் உயர்நிலைப் பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பவர்கள், அவர்களின் வயது விவரம் ஆகிய அனைத்துத் தரவுகளையும் சேகரிக்கிறோம்.
-
மகா சங்கல்பம்
அந்தக் குழந்தைகளுக்குக் கோவில்களில் "மகா சங்கல்பம்" என்ற நிகழ்ச்சியை நடத்தி, குடும்ப ஒற்றுமை, கம்மகுலத்தின் மேம்பட்ட வாழ்க்கை முறை ஆகிய விஷயங்களை வலியுறுத்திக் கூறி வருகின்றோம்.
-
அரசுப் பணித் தேர்வுகள்
அதிகாரம் மிக்க அரசுப் பதவிகளில் நமது சமூகக் குழந்தைகள் பங்கு பெற, UPSC, TNPSC உட்பட அனைத்து அரசுத் தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற, சமூக மாணவ மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் ஊக்கம் அளிப்பதோடு, தேவையான வசதிகளையும் செய்து தருகின்றோம்.
-
பக்தி நெறி நிகழ்ச்சிகள்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் திருப்பாவை மாநாடு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகிய பக்தி நெறி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம்.